ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









விழுந்தால் எழுவோம் தோல்விகள் வாழ்க்கையில்லை.



இறை யேசுவுக்குள் பிரியமான என் அன்பிற்கினிய நண்பர்களே! மீண்டும் ஒரு முறை, ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க பணியக இணையத்தளம் ஊடாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பல நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்களுடன் நம்பிக்கை பற்றி பேச விரும்புகின்றேன். முதலில் நம்பிக்கை என்றால் என்ன என்று பார்ப்போமேயானால், நம்பிக்கை (belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது. அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம். ஆனால் அது அறிவியலின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை. பெரும்பாலும் "நம்பிக்கை" என்பது அறிவிற்கு அப்பால் ஒருவரின் அல்லது ஒன்றின் மிகுந்தப் பற்றாலும் கூடிய விருப்பினாலும் ஏற்படும் உளம் சார்ந்த வெளிப்பாடாகவே இருக்கும். அதனாலேயே ஒருவர் கொண்ட நம்பிக்கையினை இன்னொருவர் அல்லது இன்னொரு அமைப்பு கேள்விக்குள்ளாக்கும் போது அதன் சரி பிழைகளை ஏற்கும் அல்லது பகுத்துப் பார்க்கும் மனநிலையை அநேகமான மனிதர்கள் இழந்து விடுகிறார்கள். மாறாக கேள்விக்குள்ளாக்கும் நபர் அல்லது அமைப்பின் மீது வன்மமாக எதிர்க்கும் மனநிலைக்கும் தள்ளப்பட்டுவிடுகிறார்கள்.

மனித மனங்களில் ஏற்படும் நம்பிக்கைகள் பலவாறாக இருக்கின்றன. அவை அவரவர் பிறக்கும், வளரும், வாழும், சூழல் மற்றும் சமூக சந்தர்ப்ப சூழ்நிலைகளை பொறுத்து ஏற்படுகின்றன. பிறந்த ஒரு குழந்தை தனது பெற்றோர் மற்றும் உறவினர் கொண்டுள்ள நம்பிக்கைகளை அப்படியே உள்வாங்கிக்கொண்டு அதனையே உண்மையென நம்பும் நிலையில் நம்பிக்கைகளை ஏற்படுத்திக்கொள்கின்றன. அநேகமாக மதம் சார்ந்த நம்பிக்கைகள் அவ்வாறான சூழ்நிலையிலேயே தோற்றம் பெறுகின்றன. சிறு வயதில் நமது பெற்றோர் நமக்கு கத்தோலிக்க மறையை இவ்வாறுதான் நமக்கு சொல்லி தந்தார்கள். அதேவேளை ஓரளவு வளர்ந்த ஒரு குழந்தை தான் வாழும் சூழல் அல்லது சூழல் மாறும் நிலையைப் பொறுத்து தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளும்.

பட்டறிவாலும், கற்றுத் தெளிவதாலும் நம்பிக்கைகளைப் பகுத்து அறியும் மனிதர்கள் பகுத்தறிவாளிகள் என அழைக்கப்படுகின்றனர். இருப்பினும் பகுத்தறிவாளர்கள் கொண்டுள்ள பகுத்து அறிவதே சரியென நம்பும் கொள்கையும் ஒரு நம்பிக்கையே ஆகும். சிலருக்கு நான் சொல்வது புரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே மிகவும் எளிய முறையில் சொல்ல வேண்டுமானால், இப்படி சொல்லலாம். பேருந்தில் பயணம் செய்கிறோம் என்றால் அந்த சாரதி (டிரைவர்) நம்மை பத்திரமாகக் கொண்டு போய் சேர்ப்பார் என்ற நம்பிக்கை இருப்பதால் தான் அதில் பயணம் செய்கிறோம். இது பஸ்ஸுக்கு மட்டுமல்ல, விமானம், ரயில், ஆட்டோ, கார் என்று எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.

தொழிலாளி மீது முதலாளி வைத்திருக்கும் நம்பிக்கைத்தான் அந்த நிறுவனத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல், அந்த முதலாளி மீது தொழிலாளிகள் வைத்திருக்கும் நம்பிக்கைத்தான் அவர்களை உண்மையாக, உற்சாகமாக உழைக்கத் தூண்டுகிறது.

கணவன்-மனைவி ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, பெற்றோர், பிள்ளைகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, உறவினர்களின் நம்பிக்கை, நண்பர்களின் பரஸ்பர நம்பிக்கை எனப் பிறர் மீது வைக்கும் நம்பிக்கைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நம்பிக்கையின் அஸ்திவாரத்தில்தான் இந்தச் சமூக அமைப்பு சுழன்று கொண்டி ருக்கிறது. பெரிய வலைப் பின்னல்களைப் போல, ஒவ்வொருவருக்கிடையேயும் மெல்லிய நூலிழை போன்ற நம்பிக்கை இழையோடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருக்கிடையேயும் எந்த பந்தமோ, உறவோ, சம்பந்தமோ இல்லாவிட்டாலும், நம்பிக்கை என்ற நூலிழையில் எல்லோரும் பிணைக்கப்பட்டிருக்கிறோம். இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு சிறிய கதை ஞாபகம் வருகின்றது.

ஒரு நாள் மனமுடைந்து போன ஒரு மனிதன் தனது வாழ்க்கையை துறந்துவிடுவது என்று முடிவு செய்தான்.… ஆம், தனது வேலை, தனது உறவுகள், அனைத்தையும் விட்டு விட்டு துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றான் . அப்போது…

கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினான்.

“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”

கடவுளின் பதில் அவனை வியப்பில் ஆழ்த்தியது…

“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”

“ஆமாம்” என்று அவன் பதிலளித்தான்.

இப்பொழுது கடவுள் அவனுடன் பேசலானார்.

“நான் புதர் செடி மற்றும் மூங்கிலுக்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போதில் இருந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.

இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.

“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.

ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது. அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.

“இத்தனை ஆண்டு காலத்தில் மூங்கில் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.

எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” என்று சாந்தமாக பதிலளித்தார்.

மேலும் கடவுள் அவனிடம் , “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.

“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனால் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இறுதியாக, “உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”

அவன் கேட்டான், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?”

“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.

“எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினான் அவன்.

“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.

“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?” என்று வியந்தான் அவன்.

“ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.

அவன் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டான். ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.

கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை. அவர் எப்போதும் நம் கூடவே இருக்கின்றார். நாம் துன்பங்களில் துவளுகின்ற போது ஆண்டவரின் உடனிருப்பை மறந்து அவர் மீது உள்ள நம்பிக்கையை இழந்து விடுகின்றோம். திருத்தூதர் பவுல் இவ்வாறு கூறுவார். மனிதனால் தாங்கக்கூடிய சோதனை தவிர வேறு எதுவும் உங்களுக்கு வந்ததில்லை. கடவுளோ, நம்பத்தக்கவர்; வெல்ல முடியாத சோதனைக்குள்ளாகும்படி உங்களை விடமாட்டார். சோதனை வரும்பொழுது அதைத் தாங்கிக்கொள்ளும் திறனளித்து அதனின்று தப்பவும் வழி செய்வார். 1 கொரிந்தியர். 10: 13

அடுத்து, நம்பிக்கை என்பதற்கு விவிலியம் தரும் கருத்து அதிக விரிவானது, இன்றைய மருத்துவர்கள், விஞ்ஞானிகள், உளவியலாளர்கள் மத்தியில் பொதுவாக காணப்படும் கருத்தைவிட அதிக அர்த்தம் பொதிந்தது. “நம்பிக்கை” என திரு விவிலியத்தில் மொழிபெயர்க்கப்படும் மூலமொழி வார்த்தைகள் ஆர்வத்துடன் காத்திருப்பதையும் நல்லது வருமென எதிர்நோக்கியிருப்பதையும் அர்த்தப்படுத்துகின்றன. இதனை புதிய ஏற்பாட்டில் உள்ள எபிரேயர் நூலானது அழகாக எடுத்து இயம்புகின்றது. விசுவாசம் என்பது நாம் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பவை கிடைக்கும் என்னும் நிலையான உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றி மனந்தளராத நிலை. இந்த விசுவாசத்தின் பொருட்டே நம் முன்னோர் நற்பெயர் பெற்றனர். உலகங்களெல்லாம் கடவுளின் திருச்சொல்லால் உருவாயின என்றும், ஆகவே காணாதவற்றினின்று காண்பவை உண்டாயின என்றும் விசுவாசத்தினாலேயே உணர்கிறோம். (எபிரேயர்.11 : 1 – 3). ஆகவே என் இனிய உறவுகளே! உங்கள் வாழ்வில் வரும் தோல்விகள், துன்பங்கள், இடர்கள், பிணிகள், மனக்கசப்புகள் ஆகிய தடைகளை உடைத்து வேதனைகளை சாதனைகளாக்கி, நம்பிக்கை தான் வாழ்க்கை என்ற உயரிய சிந்தனையோடு பயணிக்க அனைவரையும் அழைக்கின்றேன். விழுந்தால் எழுவோம் தோல்விகள் வாழ்க்கையில்லை.

நடந்துவந்த பாதைகளெல்லாம் முள்வேலிகள்தான்.....
நடக்கின்ற பாதைகளும் கரடு முரடுதான்....
நடக்கப்போகும் பாதைகளும் துன்பம் துயரம்தான்....
நம்பிக்கை ஒன்றே நம் காலணியாகட்டும்
[2017-09-24 23:35:09]


எழுத்துருவாக்கம்:

Bro. A.Anton Gnanaraj Reval SDB
St. Thomas Theological College
Messina
Sicily
Italy