ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









இறைவன் உன்னை அழைக்கிறாரா?



அன்பிற்கினிய என் நண்பர்களே! தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இணையத் தளம் மூலமாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். பொதுவாக பாஸ்கா காலத்தின் நான்காவது ஞாயிறு ஆனது நல்லாயன் ஞாயிறு என்று அழைக்கப்படுகின்றது. இந்த நாளின் நற்செய்தி வாசகமானது இயேசுவை தன் மந்தைகளுக்காக உயிரைத்தியாகம் செய்கின்ற ஒரு நல்ல ஆயனாக வர்ணிக்கின்றது. எம் அன்னையாம் திருச்சபையும் இந்த நாளை இறை அழைத்தல் தினம் ஆக பிரகடனப்படுத்தியுள்ளது. இறை இரக்கத்தின்ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆண்டிலேயே எமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேவ அழைத்தலைப்பற்றி கூறும் போது இவ்வாறு கூறுகின்றார்: திருச்சபையானது இரக்கத்தின் இல்லம் ஆகும், இந்த மண்ணில்தான் தேவ அழைத்தல்கள் வேரூன்றப்பெற்று, முதிர்ச்சியடைந்து நற்கனிகளை கொடுக்கின்றது.

ஆகவே இறையேசுவில் அன்புமிக்க என் நண்பர்களே! இந்த இனிய நாளிலே தேவ அழைத்தல் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். பொதுவாக பெரும்பாலான இளைஞர், யுவதிகள் கேட்கும் கேள்வி இதுதான், கடவுள் என்னை அழைப்பாரா? ஆம், நிச்சயமாக கடவுள் அனைவரையும் விசுவாசமுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழவும், இறைவனை அன்பு செய்து ஆராதிக்கவும், இயேசு அன்பு செய்தது போல நமது அயலவர்களை அன்பு செய்து, சேவை செய்து வாழ அழைத்திருக்கின்றார்.

இறைவன் அதிகமானோரை, கணவன் மனைவியாக வாழுகின்ற திருமண வாழ்விற்கு அழைத்து நிற்கின்றார். திருமணம் செய்வது என்பது வெறுமனே கவர்ச்சியால் வருகின்ற தீர்மானம் அல்ல, மாறாக திருமணம் என்பது ஒரு உடன்படிக்கை. ஆகவே திருமணம் செய்வதற்கு முன் அவர்களுக்கிடையே சரியான புரிந்துணர்வு, ஆழ்ந்த அன்பு, தியாக மனப்பான்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை என்பன இங்கு இருக்க வேண்டும். இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு அன்றாடம் இறைவனிடம் செபிக்க வேண்டும். அடுத்து கிறீஸ்து தான் விட்டுச்சென்ற நற்செய்திப்பணியை தொடர்ந்து ஆற்றுவதற்காக சிலரை அழைத்திருக்கின்றார். இவர்களில் சிலர் குருக்களாக, அருட் சகோதரர்களாக , அருட் சகோதரிகளாக , பொது நிலை வாழ்வு வாழும் துறவிகளாக காணப்படுகின்றனர். துறவற வாழ்வை தெரிவு செய்வதற்கும் செபம் என்பது அவசியமாகின்றது. அத்துடன் மேலே குறிப்பிட்டது போல ஆழ்ந்த அன்பு, தியாகம், சுயநலமற்ற பொதுநலம், தாழ்மை, கற்பு , கீழ்ப்படிவு மற்றும் ஏனைய கிறீஸ்தவ பண்புகளும் இருக்க வேண்டும். இருந்த போதிலும் துறவறம் தான் சிறந்து என்றோ அல்லது இல்லறம் தான் சிறந்தது என்று கூற முடியாது. இரண்டுமே சிறந்தது தான். ஒரு மனிதனுக்கு இரண்டு கைகள் இருப்பதுபோல இவை இரண்டும் எமது திருச்சபையிலே சமனான முக்கியத்துவம் பெறுகின்றன.

இனி கிறீஸ்தவ அழைத்தல் என்றால் என்ன? என்று பார்ப்போமேயானால், திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனும், இயேசுவைப்போல் பணி செய்ய அழைக்கப்பட்டுள்ளான். இதனையே பொது குருத்துவம் என்று அழைக்கின்றோம்.

நாம் சிறுபிள்ளைகளாக இருந்த போது, எமது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் எமது பெரியோர்கள் நம்மிடம் கேட்கின்ற கேள்வி, நீங்கள் பெரியவனாய், பெரியவளாய் வந்து என்ன செய்யப்போகின்றீர்கள்? உங்களது எதிகால இலட்சியம் என்ன? இக் கேள்விகளுக்கு ஒவ்வொரு குழந்தையின் பதிலும் வெவ்வேறு விதமாக இருக்கும். அப்பதில்களாக ( மருத்துவர்,ஆசிரியர், குரு, அருட்சகோதரி,அருட்சகோதரர், பொறியியலாளர், விமானி, காவல் துறை அதிகாரி) இவற்றை குறிப்பிடலாம். உடனே பெரியவர்கள் கைகளைத் தட்டி குழந்தைகளை வாழ்த்துவார்கள். இதை ஒரு விளையாட்டு போல கருதலாம்.

ஆனால் நாங்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்து ஒரு ஆளுமை மிக்க இளைஞர்களாகவோ, யுவதிகளாகவோ வளர்ந்து வருகின்ற போது, நமது எதிர்கால இலட்சியம் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவோம். நம்மில் உள்ள திறமைகள், விருப்பங்கள், கல்விதகைமைகள் இவைகளைக்கொண்டு, நாம் எதிர்காலத்தில் எப்படியாக வரவேண்டும் என தீர்மானிப்போம். உண்மையில், இறை அழைப்பினை தெரிவு செய்வது என்பது, கடவுளின் குரலுக்கு செவிசாய்த்து, அதற்கு நமது விருப்பத்தை தெரிவிப்பது ஆகும். திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கிறீஸ்தவனும் / கிறீஸ்தவளும் இறைவனுடன் ஒன்றித்து வாழ அழைக்கப்பட்டுள்ளர்கள். ஆனாலும் கிறிஸ்தவராக இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் விருப்பத்திற்கமைய தெரிவு செய்ய மூன்று வாழ்க்கைத்தெரிவுகள் உள்ளன. அவையாவன:

1. பிரமச்சாரி (தனியாக வாழ்வது)
2. இல்லற வாழ்வு (கணவன்- மனைவி)
3. துறவற வாழ்வு (குரு, அருட் சகோதரர், அருட் சகோதரி, பொதுநிலை வாழ்வு வாழும் துறவிகள்)

இவற்றில் எவற்றையாவது ஒன்றை தெரிவு செய்ய ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கின்றது. இது பற்றி இயேசு கொண்டிருந்த கருத்தினை மத்தேயு .19:21 இல் காணலாம். உங்களுக்கு தகுந்த வாழ்க்கைமுறையை தெரிவு செய்ய விரும்பினால் இறைவனின் விருப்பத்துடனும், பெரியவர்களின் ஆலோசனையுடனும் செய்யுங்கள். இறைவனின் விருப்பத்தை எவ்வாறு அறிவது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. நமது நாளாந்த செபத்தினூடாக இதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைமுறையை தெரிவு செய்ய கீழே உள்ள வழிமுறையை பின்பற்றுங்கள்.

1. செபிப்பது (PRAY )
2. ஆராய்ந்து அறிந்து கொள்வது ( INVESTIGATE )
3. பங்கெடுத்தல் (GET INVOLVED )
4. பல்வேறு அனுபவங்களை பெறுவது (EXPERIENCE )
5. தீர்மானம் செய்தல் (DECIDE )

1.செபிப்பது (PRAY )
ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்களை இறைவனுடன் உரையாடுவதற்காக செலவழியுங்கள். இறைவா, நான் எனது வாழ்வில், நான் என்ன செய்ய வேண்டும்? எதற்காக என் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும்? என்று எனக்கு வழிகாட்டும் என செபியுங்கள். இயன்றவரை திருப்பலியில் பங்கெடுங்கள்.

2.ஆராய்ந்து அறிந்து கொள்வது ( INVESTIGATE )
உங்கள் பெற்றோர்கள், உங்கள் சமூகத்தில் உள்ள பெரியவர்கள், ஆசிரியர்கள், உங்கள் ஞானப் பெற்றோர்கள், உறவினர்களிடம் வாழ்க்கையின் மகத்துவம் பற்றி விசாரியுங்கள். பல நல்ல நூல்களை வாசியுங்கள். இணையத்தளங்களில் காணப்படும் பல நல்ல விடயங்களை படித்தறியுங்கள்.துறவற வாழ்வினை நீங்கள் விரும்பினால் உங்கள் பங்குக்குருவிடமோ, அருட் சகோதரர்களிடமோ , அருட் சகோதரிகளிடமோ பேசுங்கள். தேவ அழைத்தலுக்கு பொறுப்பாக இருப்பவர்களை சந்தித்து உரையாடுங்கள்.

3. பங்கெடுத்தல் (GET INVOLVED )
துறவற வாழ்வு எப்படி என்று அறிய விரும்பினால் திருச்சபையினால் ஆற்றப்படும் பணிகளில் நீங்கலு பங்கெடுங்கள்.நமது கத்தோலிக்க திருச்சபையினரால் பல பணிகள் ஆற்றப்படுகின்றன. அதில் நீங்களும் தொண்டர்களாக பணியாற்றுங்கள். திருச்சபையின் வளர்ச்சிக்கு துடிப்புள்ள, சக்திமிக்க,ஆளுமை படைத்த, அர்ப்பணிப்புள்ள இளைஞர்கள் தேவைப்படுகின்றார்கள் என்பதை மறந்து விடாதிர்கள்.

4. பல்வேறு அனுபவங்களை பெறுவது (EXPERIENCE )
இன்று எமது திருச்சபையிலே பல துறவற சபைகள் காணபடுகின்றது. இவர்கள் தங்களது ஸ்தாபகர் உடைய வாழ்வினை பின்பற்றி பல்வேறு பணிகளை செய்கின்றார்கள். இளைஞர் பணி, பங்குப்பணி, மருத்துவப் பணி, மறை போதகப் பணி, திருச்சபைக்காக செபிக்கும் பணி, கல்விப்பணி, சிறுவர், முதியோர் அனாதைகள் பராமரிப்பு பணி, சமூகப்பணி, என பல வகையான பணிகளை எமது திருச்சபை ஆற்றுகின்றது. இது பற்றி அறிய விரும்பினால், உங்கள் மறைமாவட்டத்தில் உள்ள குருமடங்கள், கன்னியர் மடங்கள், துறவியர் ஆச்சிரமங்கள், பங்குகள், துறவற சபையினரால் நடாத்தப்படும் இல்லங்கள் இப்படியான இடங்களுக்கு சென்று அவர்களது வாழ்க்கைமுறை,பணி வாழ்வு, செப வாழ்வு, குழும வாழ்வு, அவர்கள் எவ்வாறு தங்களை கடவுளுக்கு அர்ப்பணித்து வாழ்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இறைவனின் அழைப்பை நீங்கள் அதிகமாக உணர்ந்தால் குருமடங்கள் , கன்னியர்மடங்கள் இவைகளுக்கு சென்று சில நாட்கள் தங்கி உங்களது அனுபவத்தை பெறுங்கள்.

5. தீர்மானம் செய்தல் (DECIDE )
கிறீஸ்துவின் நற்செய்தியை உலகின் கடை எல்லை வரை எடுத்துச் செல்வதற்கு, அர்ப்பணிப்புள்ள அருட் சகோதரிகள், அருட் சகோதர்கள்,அருட் தந்தையர்கள் நமது திருச்சபைக்குத் தேவையாக உள்ளது. இறைவனின் அழைப்பை உணர்கிறீர்களா? அப்படியென்றால் இறைவனின் அழைப்பிற்கு பதிலளிக்க விரும்பினால் உங்கள் நாளாந்த செபத்தின் மூலமாக அறிந்து ,ஆராய்ந்து, திருச்சபையின் பணிகளில் பங்கெடுத்து துறவற வாழ்வில் இணையுங்கள்.

இளைஞனே! யுவதியே ! இலட்சிய நண்பர்களே!
அழகு செய்ய முடியாத அசிங்கங்கள் உலகில் இல்லை.
குணப்படுத்த முடியாத காயங்கள் உலகில் இல்லை.
திருத்த முடியாத தீர்ப்புக்கள் உலகில் இல்லை.
இந்த இறை இயேசுவின் இறையரசுக்கனவை
நாங்களும் நம்புகின்றோம் .
நம்பினால் நீயும் வா, சேர்ந்தே பணியாற்றுவோம்.

[2016-04-16 00:21:08]


எழுத்துருவாக்கம்:

சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB
புனித. தோமஸ் இறையியல் கல்லூரி
மெஸினா, சிசிலியா
இத்தாலி