யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-02-19

(இன்றைய வாசகங்கள்: லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 17-18 ,திருப்பாடல் 103: 1-2. 3-4. 8, 10. 12-13 ,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 16-23,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-48)




கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது.


திருப்பலி முன்னுரை

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றவரும், நம் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றவரும், நம் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றவரும், நமக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றவருமான நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

இறையன்பும், பிறரன்பும், தூய்மையும், தாழ்மையும் கொண்டவர்களாய் நாம் வாழுவதைத்தான் இறைவன் விரும்புகின்றார் என்பதை இன்றைய இறைவார்த்தைகள் பிரதிபலித்துக் காட்டுகின்றன. அத்தோடு நமது உடல் என்பது கடவுளுடைய கோயில் என்றும் இங்கே தூய ஆவியார் குடியிருக்கின்றார் என்றும் நமக்குத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வேளையில் நாம்: நமது உடல் என்பது கடவுளுடைய கோயில் என்றும் இங்கே தூய ஆவியார் குடியிருக்கின்றார் என்பதையும் ஆழமாக உணர்ந்து ஏற்றுக் கொண்டவர்களாய்: இறையன்பும், பிறரன்பும், தூய்மையும், தாழ்மையும் கொண்டவர்களாய் வாழ இத்திருப்பலியில் வல்லமை கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக!
லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 17-18

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்! உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கு அடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்துகொள். பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!”

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
திருப்பாடல் 103: 1-2. 3-4. 8, 10. 12-13

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். 13 தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். பல்லவி

இரண்டாம் வாசகம்

நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 16-23

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில். எவரும் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக்கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, ``ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பார்.'' மேலும் ``ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார்.'' எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா ஆகிய அனைவரும் உங்களுக்கு உரியவர்களே. அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்கு உரியவைகளே. ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-48

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: `` `கண்ணுக்குக் கண்', `பல்லுக்குப் பல்' என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள். `உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', `பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக' எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. ஞானத்தின் ஊற்றே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இறை ஞானத்துடன், உமது மீட்புத் திட்டத்தை உலக மக்களிடையே கொண்டு சேர்க்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்கள் வானகத் தந்தையே இறைவா,

உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். உம் அன்புத் திருமகன் இயேசு தம் போதனையாலும், வாழ்வாலும் எங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கடைப்பிடிக்க அருள்தாரும். யாரெல்லாம் எங்களைத் துன்புறுத்துவதாக நாங்கள் கருதுகிறோமோ, அவர்களை எல்லாம் இப்போது நினைவுகூர்ந்து, அவர்களுக்காக உம்மை மன்றாடுகிறோம். அவர்களை ஆசிர்வதியும். உயர்த்தி, வலிமைப்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கருணைக் கடலாகிய எம் இறைவா!

மாந்தரின் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு நன்மைச் செய்யும் விதமாய் அமையவும், சுயநலம் பாராமல் அடுத்திருக்கும் மாந்தரின் முன்னேற்றத்தில் தன்னலமற்ற சேவையின் மூலம் ஏற்றம் பெறச் செய்யவும். அனைவரும் இணைந்துச் செயல்பட்டு உம் அன்பின் ஆட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கருணைக் கடலாகிய எம் இறைவா!

இன்று உலகில் எங்கள் குடும்பங்கள் சிறுவட்டத்திற்குள் சிக்கவிடாமல் உறவுகளை மதித்த அதனை வளர்க்கக் கோபம், பொறமை, பேராசை, தன்னலம் போன்ற குணங்களிலிருந்து விடப்பட்டுப் பெயரிவர் முதல் சிறியவர் வரை அனைவர் மீதும் அன்புப் பாராட்ட உம் அன்னை மரியாளைப் போலக் கரிசனை அன்புப் பெற்றிட அருள்மாரிப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

5. கருணைக் கடலாகிய எம் இறைவா!

புதிய வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் எம் இளையோர்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் எதிர்பார்த்திருக்கும் வளமான வாழ்வு, சிறந்த வேலைவாய்ப்பு, உயர்கல்விக்கான தேவையான தரமான கல்விகூடங்களில் அனுமதி, பொருளாதார உதவிகள் மற்றும் உள்ள உடல் உறுதியை வழங்கிடத் வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

6. நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கும் தந்தையே இறைவா!

பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வேதனையோடும், கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களைக் குணப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

7. வளங்களின் நிறைவே எம் இறைவா!

எம் பங்கைச் சார்ந்த அனைத்து மக்களையும் ஆண்டுப் பராமரித்து, நற்சுகமும், வளமும் பொழிந்து அனைவரின் குடும்பங்களும் உமது பேரன்பை நிறைவாய் பெற்று உம் அன்னையைப் போல உம் சீடர்களாய் வாழ்ந்திடவும், திருமுழுக்கின்போது நாங்கள் பெற்றுக் கொண்ட உப்பையும் ஒளியையும் நாங்கள் வாழும் இடங்களில் மற்றவர்களுக்கு வழங்கிடத் தேவையாக வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.


இன்றைய சிந்தனை

தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம் !

தீமை செய்பவர்களை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்காட்டுங்கள்” என்னும் ஆண்டவரின் அறைகூவல் மொழிகளை இன்று தியானிப்போம். இயேசுவின் கட்டளைகள் ஆழமானவை, நடைமுறைப்படுத்த சிக்கலானவை. எனவேதான், இயேசுவே #8220;குறுகலான பாதை வழியே நுழையப் பாடுபடுங்கள்” என்று சொன்னார். இன்றைய சூழ்நிலையில், தீமை செய்பவர்களை எதிர்த்து நில்லாமல் இருப்பது நல்லதோர் அறிவுரையே. #8220;பிறர்க்கின்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்” என்னும் குறளுக்கேற்ப, பிறருக்குத் தீமை செய்பவர்களுக்குப் பதில் தீமை தானாகவே வரும். எனவே, நாமே அவர்களுக்கு அந்த தீமையைச் செய்ய வேண்டாம். பழிவாங்கும் கடமையை இறைவனிடம் விட்டுவிடுவதே சிறந்தது. இறைவன் நல்லவர், நீதியானவர். அவரே அவரவர் செயல்களுக்கேற்ப பரிசும், தண்டனையும் வழங்குவார். எனவே, தீமை செய்கிறவர்களை எதிர்த்து நில்லாமல், விலகிச் செல்வோம். அவர்களுக்குரிய சன்மானம் இறைவனால் அவர்களுக்கு வழங்கப்படும்.

மன்றாட்டு:

நல்ல நடுவரான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் தந்த அறிவுரைக்கேற்ப நாங்கள் தீமை செய்வோரை எதிர்த்து நில்லாமல், பொறுமை காக்கின்ற அருளைத் தாரும். ஆமென்.