யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் சனிக்கிழமை
2016-10-22

புனித 2ம் புனித ஜோன் போல்




முதல் வாசகம்

தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-16

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால்தான், `அவர் உயரே ஏறிச் சென்றார்; அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்; மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்' என்று மறைநூல் கூறுகிறது. `ஏறிச் சென்றார்' என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின் கீழான பகுதிகளுக்கு அவர் இறங்கினார் என்று விளங்குகிறது அல்லவா? கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர். அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப்பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம். ஆகவே இனி நாம் குழந்தைகளைப்போல் இருக்கக் கூடாது. மனிதருடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் தவறுக்கு வழிநடத்தும் ஏமாற்று வழிகளையும் நம்பி, அவர்களுடைய போதனைகள் என்னும் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படக் கூடாது. மாறாக, அன்பின் அடிப்படையில் உண்மை பேசி, தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும். அவரால்தான் முழு உடலும் இசைவாய்ப் பொருந்தித் தன்னிடமுள்ள தசைநார்களால் இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட பணியைச் செய்வதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பால் கட்டமைப்புப் பெற்று வளர்ச்சியடைகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
திருப்பாடல் 122: 1-2. 3-4 4-5

ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்'', என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி

3 எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட நகர் ஆகும். 4ய ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர். பல்லவி

4b இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றிசெலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பம் அன்று; ஆனால் அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, ``இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும் விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்'' என்றார். மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ``ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், `பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார். தொழிலாளர் மறுமொழியாக, `ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்' என்று அவரிடம் கூறினார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும்...அழிவீர்கள்'' (லூக்கா 13:3)

இயேசு கடவுளாட்சி பற்றி அறிவித்த போது மக்கள் மனம் மாறி நற்செய்தியை நம்பவேண்டும் என்று கேட்டார். உள்ளத்தில் மாற்றம் ஏற்படும்போது மனித சிந்தனையில் மாற்றம் தோன்றும்; சிந்தனை மாறும்போது நம் ஆழ்ந்த நம்பிக்கைகள் புதிய நிலை அடையும்; நம்பிக்கைகள் உருமாற்றம் பெறும்போது நம் செயல்கள் அவற்றிற்கு ஏற்ப அமையும். எனவே, மனம் மாறுங்கள் என்று இயேசு விடுத்த அழைப்பு மனித வாழ்க்கையில் பேரளவிலான ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என்று இயேசு விரும்பியதைக் குறிக்கின்றது. மாற்றம் என்பது எப்போதுமே நலமாக அமையும் என்பதற்கில்லை. சிலர் நல்லவர்களாக இருந்து தீயவர்களாக மாறக் கூடும். ஆனால் இயேசு எதிர்பார்த்த மாற்றம் அதுவன்று. இயேசு யார் என்பதை மக்கள் முழுமையாக உணராமல், இயேசுவின் வாழ்வில் கடவுள் ஒரு மாபெரும் புதுமையை நிகழ்த்துகிறார் என்பதை அறியாமல் இருந்த வேளையில்தான் இயேசு அவர்கள் தங்களுடைய மன நிலையை மாற்றிக்கொண்டு, கடவுள் தாமே இயேசுவின் வழியாக மக்களுக்கு மீட்புப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிறார் என்பதை உள்ளத்தின் ஆழத்தில் ஏற்று, அதற்கு ஏற்ற பதில்மொழி வழங்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பை முன்வைக்கிறார்.

மனிதர் தம் வாழ்க்கை முறையை மாற்றி நல்வழியில் செல்ல வேண்டும் என்று கடவுள் அழைப்பு விடுக்கும்போது அந்த அழைப்பினை யாவரும் உடனடியாக ஏற்றுக்கொள்வர் என்பதற்கில்லை. சிலர் தங்கள் பழைய வாழ்க்கையிலேயே ஊறிப்போயிருப்பர்; வேறு சிலர் மாற்றம் உடனடியாக வேண்டாம் என்று கால தாமதம் செய்வர்; மற்றும் சிலர் மனமுவந்து தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கொணர்வர். எவ்வாறாயினும், கடவுள் பொறுமையோடு செயல்படுகிறவர். அத்திமரம் காய்த்து கனிதரும் என்று எதிர்பார்த்த வேளையில் அதிலிருந்து கனி தோன்றவில்லை என்றால், அம்மரத்தை உடனடியாக வெட்டி வீழ்த்துவதற்குப் பதிலாகப் புதிதாக எருபோட்டு அதைக் கண்காணித்து அதிலிருந்து கனிதோன்றும் என்று இன்னும் ஓர் ஆண்டு பொறுமையோடு காத்திருப்பவர் நம் கடவுள் (காண்க: லூக்கா 13:6-9). என்றாலும் கடவுளின் பொறுமையை நாம் சோதிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்க்கையில் உம் உடனிருப்பை உணர்ந்து, நற்செயல்கள் என்னும் கனியை ஈந்தளிக்க அருள்தாரும்.