யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம்
2016-09-28




முதல் வாசகம்

இறைவன் முன் மனிதர் நேர்மையாய் இருப்பதெப்படி?
யோபு நூலிலிருந்து வாசகம் 9: 1-12, 14-16

யோபு தன் நண்பர்களுக்குக் கூறிய மறுமொழி: உண்மையில் இது இவ்வாறு என்று அறிவேன்; ஆனால், மனிதர் இறைவன் முன் நேர்மையாய் இருப்பதெப்படி? ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால், ஆயிரத்தில் ஒன்றுக்கேனும் அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா? இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்; ஆற்றலில் வல்லவர்; அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி, வளமுடன் வாழ்ந்தவர் யார்? அவர் மலைகளை அகற்றுவார்; அவை அதை அறியா; அவர் சீற்றத்தில் அவைகளைத் தலைகீழாக்குவார். அசைப்பார் அவர் நிலத்தை அதனிடத்தினின்று; அதிரும் அதனுடைய தூண்கள். அவர் கட்டளையிடுவார்; கதிரவன் தோன்றான்; அவர் மறைத்திடுவார் விண்மீன்களை. தாமே தனியாய் வானை விரித்தவர். ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர். வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை விண்மீன் குழுக்களையும் அமைத்தவர் அவரே. உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும், கணக்கிட முடியா அருஞ்செயல்களையும் ஆற்றுநர் அவரே. இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில் நான் பார்க்க முடியவில்லை. நழுவிச் செல்கையில் நான் உணர முடியவில்லை. இதோ! அவர் பறிப்பாரானால், அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர் என அவரைக் கேட்பார் யார்? இப்படியிருக்க, எப்படி அவருக்குப் பதிலுரைப்பேன்? எதிர்நின்று அவரோடு எச்சொல் தொடுப்பேன்? நான் நேர்மையாக இருந்தாலும், அவருக்குப் பதிலுரைக்க இயலேன். என் நீதிபதியிடம் நான் இரக்கத்தையே கெஞ்சுவேன்; நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும், என் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!
திருப்பாடல் 88: 9-10. 11-12. 13-14

9 ஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகின்றேன்; உம்மை நோக்கி என் கைகளைக் கூப்புகின்றேன். 10 இறந்தோர்க்காகவா நீர் வியத்தகு செயல்கள் செய்வீர்? கீழுலகின் ஆவிகள் எழுந்து உம்மைப் புகழுமோ? பல்லவி

11 கல்லறையில் உமது பேரன்பு எடுத்துரைக்கப்படுமா? அழிவின் தலத்தில் உமது உண்மை அறிவிக்கப்படுமா? 12 இருட்டினில் உம் அருஞ்செயல்கள் அறியப்படுமா? மறதி உலகில் உம் நீதிநெறி உணரப்படுமா? பல்லவி

13 ஆண்டவரே! நானோ உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; காலையில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன். 14 ஆண்டவரே! என்னை ஏன் தள்ளிவிடுகின்றீர்? உமது முகத்தை என்னிடமிருந்து ஏன் மறைக்கின்றீர்? பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62

அக்காலத்தில் இயேசு சீடர்களோடு வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, ``நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்'' என்றார். இயேசு அவரிடம், ``நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை'' என்றார். இயேசு மற்றொருவரை நோக்கி, ``என்னைப் பின்பற்றி வாரும்'' என்றார். அவர், ``முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ``இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்'' என்றார். வேறொருவரும், ``ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்'' என்றார். இயேசு அவரை நோக்கி, ``கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

பின்பற்றுவேன், ஆனால்... !

இயேசுவிடம் வந்து அவரது சீடராய் வாழ விருப்பம் தெரிவித்த மூன்று மனிதர்களைப் பற்றி இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம். இவர்கள் மூவரும் நம்மையே பிரதிபலிக்கின்றார்கள் என்பதை உணர வேண்டும். நாமும் இயேசுவின் சிறந்த சீடர்களாய் வாழ விரும்புகிறோம். நமக்கும் நல்ல எண்ணங்கள், உயர்ந்த சிந்தனைகள் அவ்வப்போது எழுகின்றன. ஆனால், பல தடைகள் நம்மை ஈர்க்கின்றன. சீடராய் வாழவிடாமல் தடுக்கின்றன. எனவே, நாமும் அந்த மூன்று மனிதர்களைப் போல சாக்குபோக்குகளைக் கண்டுபிடிக்கிறோம். முதலில் என்னுடைய வீட்டுக் கடமைகள் முடியட்டும், அல்லது இந்தப் பணிகளை ஆற்றிவிட்டு அதன்பின் நான் முழு நேரமாக இறைபணியில் ஈடுபடுவேன் என்றெல்லாம் எண்ணுகின்ற நல்ல உள்ளங்கள் பல இருக்கின்றன. ஆனால், இயேசு ஒரு தெளிவைத் தருகின்றார்: அனைத்திற்கும் மேலாக ஆண்டவரைத் தேடுங்கள். அவருக்குப் பணி புரியுங்கள். மற்ற அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்வார்.

எனவே, பல்வேறு பணிகளுக்கு மத்தியில் இயேசுவின் சீடராய் வாழ விரும்புவோர் அனைத்திற்கும் மேலாக இயேசுவையே முதற் கடமையாகக் கருதவேண்டும். மற்ற கடமைகளையெல்லாம் அவரே பார்த்துக்கொள்வார். இதுவே நமது நம்பிக்கை. இதுவே பலரின் அனுபவம்.

மன்றாட்டு:

சீடர்களின் முழு அர்ப்பணத்தையும எதிர்பார்க்கும் இயேசுவே, என்னுடைய அரைகுறை அர்ப்பணத்தை எண்ணி வெட்கி, மன்னிப்பு கோருகிறேன். அனைத்திற்கும் மேலாக உம்மைத் தேடவும், உமக்கே பணிபுரியவும், உம்மை எல்லா வேளையிலும் பின்பற்றவும் எனக்கு அருள் தாரும். ஆமென்.