வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)





யானைத் தாக்குதல்கள் குறித்து இந்தியத் தலத்திருஅவை கவலை!

இந்தியாவின் கேராளாவில் யானைத் தாக்குதல்கள் அதிகரித்துவரும் வேளை, சிலர் மனிதர்களை விட காட்டு விலங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று பேராயர் Raphael Thattil அவர்கள் கருத்துத் தெரிவித்ததாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம். மார்ச் 24, இஞ்ஞாயிறன்று, கேரளாவின் வயநாடு மாவட்டத்தை உள்ளடக்கிய மானந்தவாடி மறைமாவட்டத்தில் நடைபெற்ற குருத்து ஞாயிறு திருப்பலிக்குத் தலைமை தாங்கிய சீரோ மலபார் வழிபாட்டு முறை பேராயர் Raphael Thattil அவர்கள் இவ்வாறு கூறியதாக அச்செய்தி நிறுவனம் உரைத்துள்ளது.
மேலும் புலம்பெயர்ந்த குடும்பத்தினர் யாவரும் வன வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள் அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள பேராயர் Thattil அவர்கள், அம்மக்கள் கடினமாக உழைத்து உணவை உற்பத்தி செய்பவர்கள் என்றும், அவர்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவர்கள் என்றும் குறிப்பிட்டதாக எடுத்துரைக்கிறது அச்செய்தி நிறுவனம். வனவிலங்குகளைப் பாதுகாக்க நம்மிடையே கடுமையான சட்டங்கள் உள்ளன, ஆனாலும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே மோதல் எழும் சூழலில், ​​​​மனிதர்கள் குறைந்தளவே பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும் தனது கவலையை வெளிப்படுத்தினார் பேராயர் Thattil என்றும் குறிப்பிடுகிறது அச்செய்தி.
மேலும் மிருகங்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதையடுத்து, காடுகளை ஒட்டிய மலைகளின் சுற்றுப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க, கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, தலத்திருஅவைத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது. பிப்ரவரியில் தொடங்கி நான்கு மாதங்கள் நீடிக்கும் கோடை காலத்தில், வன வளங்கள் வறண்டு போவதால், வன விலங்குகள், அதிலும் குறிப்பாக, யானைகள் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதால் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதாக அறிக்கைகள் கூறுகின்றன என்றும் அச்செய்திக் குறிப்பு எடுத்துக்காட்டுகிறது.
இந்த வடக்கு மாவட்டத்திலுள்ள 10 இலட்சம் மக்களில் ஏறத்தாழ 22 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் என்றும், இவர்கள் பெரும்பாலும் கிழக்கு வழிபாட்டு முறையான சீரோ-மலபார் தலத்திருஅவையின் உறுப்பினர்கள் என்றும் கூறும் அச்செய்திக் குறிப்பு, அவர்கள் மத்திய கேரளாவிலிருந்து 70 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள் என்றும் எடுத்துக்காட்டுகிறது.
2022-23-ஆம் ஆண்டிற்கான அறிக்கை ஒன்றில் கேரள மாநிலத்தில் 8,873 காட்டு விலங்குகளின் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்றும், இதில் 98 கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறும் அச்செய்திக் குறிப்பு, இந்த 98 பேரில் யானைகள் தாக்கிக் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 27 பேர் என்றும் சுட்டிக்காட்டுகிறது. (UCAN) [2024-03-27 23:46:51]


இந்தியாவில் 11 மாநிலங்களில் கிறிஸ்தவம் பெரிதும் துயருறுகிறது!

அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெரும்பான்மையான இந்திய மாநிலங்கள் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாகச் செயல்படுகின்றன என்று தெற்காசிய நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் துன்புறுத்தல்கள் குறித்த அண்மைய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.
மார்ச் 21, இவ்வியாழனன்று வெளியிட்டப்பட்ட அறிக்கையொன்றில் இவ்வாறு கூறியுள்ள புதுதில்லையை தளமாகக் கொண்டு செயல்படும் UCF எனப்படும் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ அமைப்பு, மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 19 மாநிலங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையை கடைப்பிடிப்பதற்காக உயிருக்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர் என்று அவ்வறிக்கை சுட்டிக்காட்டுவதாக உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
இந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி வரை, ஏறத்தாழ 122 கிறிஸ்தவர்கள் மத மாற்றம் செய்ததாகப் பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அதே காலகட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான 161 வன்முறைச் சம்பவங்கள் அதன் உதவிமைய எண்களில் பதிவாகியுள்ளதாக UCF தெரிவித்துள்ளது என்றும் கூறுகிறது அச்செய்திக் குறிப்பு.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள UCF அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் A.C. மைக்கேல் அவர்கள், நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு இது அதிகம் கவலைதரும் ஒரு விடயம் என்றும், பிஜேபி ஆட்சி செய்யும் 11 மாநிலங்களிலும் மதமாற்றத் தடைச்சட்டம் அமலில் உள்ளதுடன், இது தவறாகப் பயன்படுத்தப்பட்டு கிறிஸ்தவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்துவதற்கான ஆளும் கட்சியின் கருத்தியல், சிறுபான்மை சமூகங்கள் பாதுகாப்பற்றதாக உணரும் இந்தச் சூழ்நிலையை கொண்டு வந்ததாக தெரிகிறது என்று மைக்கேல் அவர்கள் மார்ச் 21, இவ்வியாழனன்று, யூகான் செய்திக்குத் தெரிவித்ததாகவும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. [2024-03-24 00:08:30]


தூய பேதுரு இறையியல் இணையவழிக்கல்வி பட்டமளிப்பு விழா

பொதுநிலையினர் மற்றும் துறவறத்தார், இறைநம்பிக்கையில் ஆழப்படும் விதமாகவும் கிறிஸ்தவ நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்தும் விதமாகவும் ஸ்பாட் எனப்படும் தூய பேதுரு இணையவழி இறையியல் கல்வி திகழ்கின்றது என ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் அருள்முனைவர் ஜெயபிரதீப். அண்மையில் பெங்களூரு தூய பேதுரு திருப்பீட நிறுவனத்தாரால் இணையவழியில் மறைநூல் மற்றும் இறையியல் பற்றிய பட்டயப்படிப்புக்களுக்கான முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவானது பெங்களூரு தூய பேதுரு திருப்பீட நிறுவனத்தில் நடைபெற்றது. அவ்விழா குறித்த செய்தி அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் ஸ்பாட் (St. Peter’s Online Theology) நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள்முனைவர் ஜெயபிரதீப்.
பட்டமளிப்பு விழாவில் பெல்லாரி மறைமாவட்ட ஆயர் முனைவர் ஹென்றி டிசோஷா, பெங்களூரு தூய பேதுரு திருப்பீட நிறுவனத்தின் தலைவர் அருள்முனைவர் அந்தோணி இலாரன்ஸ் மற்றும் நிறுவனப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். நம்பிக்கை மற்றும் அறிவாற்றலுக்கான கொண்டாட்டமாக சிறப்பிக்கப்பட்ட இந்த முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவில் 516 மாணவர்கள் பட்டம் பெற்றனர். 364 மாணவர்கள் இறைப்பணியியல், மறைநூல், திருஅவை சட்டங்கள் போன்றவற்றில் பட்டயப்படிப்பிற்கான பட்டத்தைப் பெற்றனர். மறைநூல்கள் மற்றும் இறையியல் படிப்புக்களுக்கான இணையவழிக் கல்வியானது கல்வி மற்றும் நம்பிக்கை செறிவூட்டல் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் பெற்றுள்ளதாகவும், கிறிஸ்தவ நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள் பற்றிய ஆழமான புரிதலை வளர்ப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாகவும் இருக்கின்றது எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SPOT நிறுவனத்தின் தாக்கமானது எல்லைகடந்து நீண்டு, தொலைதூர கிராமங்களில் பணியாற்றும் நபர்களையும் சென்றடைந்துள்ளது எனவும், அருள்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள், திருப்பலி மறையுரைகளில் மட்டுமே கேட்டு வந்த விவிலிய விளக்கங்களை ஸ்பாட் நிறுவனம் வழங்கும் கல்வி வழியாக இன்னும் அதிகமதிகமாகப் பெற்று தெளிவடைய முடிந்தது எனவும் எடுத்துரைத்துள்ளார். வெறும் சான்றிதழ் படிப்புக்களாக மட்டும் இருந்துவிடாமல் தனி நபர்கள் மற்றும் சமூகங்கள் விவிலியம் பற்றிய அதிக புரிதல் மற்றும் இரக்கத்துடன் மக்களுக்குப் பணியாற்றவும், அதிகாரம் அளிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கற்றல் மற்றும் கண்டுபிடிப்பு, வாழ்க்கையை வளப்படுத்தும் வழியில் உள்ள ஆன்மாக்களை வளர்ப்பது போன்ற புதிய எல்லைகளை எதிர்காலத்தில் செய்யத் தயாராக உள்ளது என்றும், முதல் பட்டமளிப்பு விழா வெறும் கல்வி சாதனைக்கான கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல் தூயபேதுரு திருப்பீட நிறுவனத்தின் அறிவு மற்றும் நம்பிக்கையின் நீடித்த விருப்பத்திற்கான சான்றாகவும் இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். [2024-03-11 23:12:51]


பட்டினியால் வாடும் இந்திய பூர்வகுடி கிறிஸ்தவர்கள்!

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பூர்வகுடி மக்களின் தலைவர்கள் ஏறத்தாழ 17,000 பேரை பட்டினியில் இருந்து காப்பாற்ற கூட்டாட்சி தலையீட்டை நாடியுள்ளனர் என்றும், இன வன்முறையால் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அரசின் நிவாரண முகாம்களுக்கு உணவு வழங்குவதை அதிகாரிகள் நிறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது ஆசிய செய்தி நிறுவனம்.
சுராசந்த்பூர் மாவட்டத்தின் துணை ஆணையர், பிப்ரவரி 16 முதல் நிவாரண முகாம்களுக்கு உணவு தானியங்களை வழங்க மறுத்துவிட்டார் என்றும், இது ஆயிரக்கணக்கானோரை பட்டினியில் தள்ளியுள்ளது என்றும், பூர்வகுடி மக்களின் தலைவர்கள் அமைப்பு (ITLF) பிப்ரவரி 26 அன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் அளித்துள்ளது என்றும் கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
ஒன்றிய அரசு அவசரமாகத் தலையிட்டு உணவு விநியோகத்தை விரைவில் தொடங்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று உள்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது என்று உரைக்கும் அச்செய்திக் குறிப்பு, பூர்வ குக்கி இன மக்கள், பெரும்பாலும் கிறிஸ்தவர்கள், சுராசந்த்பூர் மாவட்டத்தில் அவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றும், முகாம்களுக்கு இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் தெரிவிக்கிறது.
இந்து பெரும்பான்மையான மெய்தி இனச் சமூகத்திற்கும் குக்கி இனப் பூர்வகுடி சமூகத்திற்கும் இடையிலான இன வன்முறையைத் தொடர்ந்து, மணிப்பூரில் ஏறத்தாழ 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த வன்முறையில் கொல்லப்பட்ட ஏறக்குறைய 200 பேரும், பெரும்பாலும் பூர்வகுடிகளான குக்கி இனக் கிறிஸ்தவர்கள். மேலும் இச்சம்பவத்தின்போது, ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ இல்லங்கள், ஏறத்தாழ 350 வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் உட்பட கிறிஸ்தவ நிறுவனங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. (ASIAN) [2024-02-29 23:26:20]


மதத் தலைவர்கள் வேறுபாடுகளைக் கைவிடுமாறு வேண்டுகோள்!

தென் இந்தியாவின் கர்நாடக மாநிலம், மதச்சார்பற்ற அரசியல் கட்சியால் தற்போது வழிநடத்தப்படுவதால், மதத் தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை விட்டுவிட்டு நாட்டைக் கட்டியெழுப்பிட உழைத்திடுமாறு அம்மாநிலத்தின் உடுப்பி பேராயர் Gerald Isaac Lobo அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து மதத்தினரும் இணைய வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என்று பலசமய கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது கேட்டுக்கொண்ட ஆயர் லோபோ அவர்கள், நாம் ஒரே இந்தியத் தாயின் குழந்தைகளாக வாழ முடியும் என்றும், இந்தியா அமைதியின் தோட்டம் என்பதை நமது செயல்கள் உணர்த்த வேண்டுமெனவும் உரைத்ததாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஒரு தோட்டத்தில் வெவ்வேறு வண்ணங்களில் பூக்கள் இருக்கும்போது, அதன் அழகு அதிகரிக்கிறது என்று விளக்கிய பேராயர் லோபோ அவர்கள், அவ்வாறே வெவ்வேறு மதங்கள் ஒன்றிணைந்து இணக்கமாக வாழும்பொழுது அக்காட்சியும் பார்ப்பதற்கு மிகவும் அழகுபொருத்தியதாக இருக்கும் என்றும் தனது உரையின்போது எடுத்துரைத்தார் என்றும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. மேலும் கடந்த முறை கர்நாடகாவை ஆட்சி செய்த இந்து சார்பு கட்சி மக்களை சாதி, நம்பிக்கை, மற்றும் மதத்தின் பெயரால் பிரிக்க விரும்பியது என்று யூகான் செய்தி நிறுவனத்திடம் கூறினார், கர்நாடக கத்தோலிக்க ஆயர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் அருள்பணியாளர் Faustine Lucas Lobo.
பாஜக ஆட்சியில் இருந்தபோது உடுப்பியில் பல மதவெறி சம்பவங்கள் நடந்தன என்று சுட்டிக்காட்டிய அருள்பணியாளர் Lobo அவர்கள், இருப்பினும் மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆயர் லோபோ அவர்கள் தொடர்ந்து முயற்சிகள் எடுத்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 25, இஞ்ஞாயிறன்று நிகழ்ந்த, Sarvadharma Souharda Samiti என்ற பலசமய கூட்டத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் மற்றும் சீக்கியர் மதங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். (UCAN ) [2024-02-29 23:25:31]


கோவாவில் தவக்காலத்தின் தொடக்கமாக சான்கோலேவுக்குப் திருப்பயணம்!

நாம் அனைவரும் இந்த உலகில் திருப்பயணிகள், நாம் பிறக்கும்போது எதனையும் கொண்டு வருவதில்லை, இறந்த பிறகு எதையும் இங்கிருந்து எடுத்துச் செல்வதில்லை என்றும், நமக்கு வாழ்வு அருளிய கடவுளுக்கு முதலிடம் கொடுத்து, பிறர் நலனுக்காக தன்னலமின்றி வாழ்வதுதான் முக்கியம் என்றும் கர்தினால் ஃபெலிப் நேரி ஃபெர்ராவ் கூறியதாக எடுத்துக்காட்டியுள்ளது ஆசிய செய்தி நிறுவனம்.
தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 18-ஆம் தேதியன்று, இந்தியாவின் கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்டங்களைச் சேர்ந்த கத்தோலிக்க விசுவாசிகள், சான்கோலேயின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலுக்கு ஆண்டுத் திருப்பயணம் மேற்கொண்ட வேளை, கர்தினால் ஃபெலிப் நேரி அவர்கள் இவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளது அச்செய்தி நிறுவனம். கோவா மற்றும் டாமன் பேராயர் கர்தினால் ஃபெலிப் நேரி ஃபெர்ராவ், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், விசுவாசிகள் மற்றும் சில பிற மதத்தினருடன் சேர்ந்து இந்தத் திருப்பயணத்தில் தனிப்பட்ட முறையில் பங்கேற்றதாகவும் அச்செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இத்திருப்பயணத்தின் இலக்கு அதாவது சென்று சேருமிடம் சான்கோலே என்றும், புனித ஜோசப் வாஸ், கடவுளுக்கும், அவர்தம் மக்களுக்கும் இறைபணி ஆற்றுவதற்காக, 1677-ஆம் ஆண்டில், இங்கிருந்துதான் தனது பயணத்தைத் தொடங்கினார் என்றும், அதன் பின்னர் கர்நாடகா, தமிழ்நாடு எனப் பயணித்து இறுதியில் இலங்கையை அடைந்தார் என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தவத்தின் பாதையில் ஒன்றாக நடப்போம், மற்றும் நம்பிக்கையின் முன்னறிவிப்பாளர்களாக இருப்போம்" என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டிற்கானத் இத்திருப்பயணம் தொடங்கியது எனத் தெரிவிக்கும் அச்செய்திக் குறிப்பு, கடவுளின் அன்பையும், இந்த அன்பிற்கான நமது பதிலிறுப்பையும் பிரதிபலிக்கும் வகையில், தவம் மற்றும் தியாகத்துடன் இத்தவக்காலத்தைத் தொடங்க விசுவாசிகளுக்கு இந்தத் திருப்பயணம் பெரும் உதவியாக அமைந்தது என்றும் உரைக்கின்றது.
'நம்பிக்கை திருப்பயணம்' என்று அழைக்கப்படும் இந்தத் திருப்பயணம், அவ்வுயர்மறைமாவட்டங்களின் வெவ்வேறு பங்குத்தளங்களிலிருந்து பலரும் கலந்துகொண்டனர் என்றும், இதில் பங்குபெற்ற விசுவாசிகள் அனைவரும் அதிகாலை 2 மணிக்குப் புறப்பட்டு, மாலை 5 மணிக்கு சான்கோலேவை அடைந்தனர் என்றும், அதன்பின்னர் திருநற்கருணை ஆராதனை வழிபாடும் திருப்பலியும் நடைபெற்றதாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. (AsiaNews) [2024-02-21 23:17:11]


மணிப்பூர் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியோருக்கு நன்றி

மோதல்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்துவரும் மணிப்பூர் மாநில மக்களுக்கு மனிதாபிமான மற்றும் ஆன்மீக உதவிகளை வழங்கிவரும் இந்திய கத்தோலிக்க சமூகத்திற்கும், அரசுசாரா அமைப்புக்களுக்கும் தன் நன்றியை வெளியிடுவதாக அறிவித்துள்ளார் இம்பால் பேராயர் Linus Neli.
மணிப்பூர் மக்களுக்கு மனிதாபிமான மற்றும் ஆன்மீக உதவிகளை வழங்கிய கத்தோலிக்கர்களுக்கும் அரசுசாரா அமைப்புகளுக்கும் நன்றியை வெளியிடும் அதேவேளை, அமைதி நடவடிக்கைகளுக்காக பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் காத்திருப்பதாக தெரிவித்தார் மணிப்பூர் தலைநகர் இம்பாலின் பேராயர். இந்தியாவின் இலத்தீன், சீரோ மலபார், மற்றும் சீரோ மலங்கரா வழிபாட்டுமுறை ஆயர்களை உள்ளடக்கிய CBCI ஆயர் பேரவையின் பெங்களூரு கூட்டத்தின்போது இதனை அறிவித்தார் பேராயர் நெலி.
மணிப்பூரில் அண்மை மோதல்களால் ஏறக்குறைய 180 பேர் கொல்லப்பட்டுள்ளது, பல வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் சேதமாக்கப்பட்டுள்ளது குறித்தும் எடுத்துரைத்த பேராயர், ஏறக்குறைய 300 கோவில்களும் கல்வி நிலையங்களும் அழிவுக்குள்ளாகியது, மற்றும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
வன்முறைகள் இன்னும் தொடர்ந்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய பேராயர், மணிப்பூரின் பொருளாதாரம் இந்த வன்முறைகளால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். [2024-02-11 22:36:09]


பொதுநலனை இலக்காகக் கொண்டு அரசியல் தலைவர்கள் செயல்பட வேண்டும்

நாட்டின் பொதுவான நலனை மட்டுமே எப்போதும் தங்கள் இலக்காகக் கொண்டு இந்திய அரசியல் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டங்களுக்கு ஏற்றவாறு நீதி, நேர்மை, சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவத்துடன் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் இந்திய இலத்தீன், சீரோ மலபார், மற்றும் மலங்கரா தலத்திருஅவை ஆயர்கள். பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் (அண்மையில்) இந்தியாவின் பெங்களூரூவில் நடந்த இந்திய இலத்தீன், சீரோ மலபார், மற்றும் மலங்கரா தலத்திருஅவை ஆயர்கள் ஏறக்குறைய 170 ஆயர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் போது இவ்வாறு தங்களது கருத்துக்களை ஆயர்கள் வெளியிட்டுள்ளதாக பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மகத்தான முன்னேற்றங்கள் இருந்தாலும் இந்த வளர்ச்சியின் பாதையானது கிராமப்புறங்களில் வறுமை நிலையில் வாழும் மக்களையும் உள்ளடக்கியதாக இருந்திருக்க வேண்டும் என்றும், தேசிய ஒருமைப்பாட்டைப் பேணுதல், ஜனநாயக அமைப்புக்களைப் பாதுகாத்தல் போன்றவை மிக முக்கியமானது என்றும் வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள். நாட்டின் முக்கியமான ஜனநாயக அமைப்புகள் பலவீனமடைந்து வருகின்றன என்றும், கூட்டாட்சி அமைப்பு, ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்படவேண்டிய ஊடகங்கள் போன்றவை தங்கள் பங்கை சிறப்பாக நிறைவேற்றவில்லை என்ற பரவலான கருத்து உள்ளதாகவும் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
அடிப்படை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் ஒருபோதும் பறிக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள ஆயர்கள், நாட்டின் சமூக நல்லிணக்கத்தை சேதப்படுத்துகின்ற மற்றும் ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கின்ற வகையில் செயல்கள் நடைபெற்று வருகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளனர். கல்வி மற்றும் நலவாழ்வு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எதிராக மதமாற்றம் தொடர்பான பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ள ஆயர்கள், குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள ஏறக்குறைய 2.3 விழுக்காடு மக்களில் மூன்றில் ஒரு பங்கு கிறிஸ்தவர்கள் என்றும் எடுத்துரைத்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்டி இன மக்களுக்கும், குக்கி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலை எடுத்துரைத்து மகத்தான மனித உயிர்களும், வாழ்வாதாரங்களும் இம்மோதலினால் பாதிக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலை மாற நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான தீவிர செயல்முறையைத் தொடங்க அனைத்து அரசு மற்றும் சமயங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்றக் கூட்டு முயற்சிக்கு அழைப்புவிடுத்துள்ளனர் ஆயர்கள். (FIDES) [2024-02-11 22:34:51]


இந்திய பொதுநிலையினருக்கு உதவும் திருஅவை சட்ட படிப்பு

CCBI எனப்படும் இலத்தீன் வழிபாட்டுமுறை இந்திய ஆயர் பேரவையால் நடத்தப்பட்ட, திருஅவை சட்டம் குறித்த ஒராண்டு பட்டயச் சான்றிதழ் படிப்பில் கலந்துகொண்டோருக்கு கர்தினால் Filipe Neri Ferrao அவர்களால் கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2023ஆம் ஆண்டு டிசம்பர் வரை இடம்பெற்ற இந்த பட்டயப்படிப்பு, திருஅவை வாழ்வில் ஒருங்கிணந்த பயணத்தை பலப்படுத்தும் நோக்கத்தில், ஒன்றிப்பு, பங்கேற்பு, மற்றும் மறைப்பணி ஆகியவைகளில் பொதுநிலையினருக்கு ஊக்கமும் சக்தியும் கொடுப்பதாக இருந்தது. இந்த ஓராண்டு பட்டயப் படிப்பில் கலந்துகொண்டோருக்கென ஏற்பாடுச் செய்யப்பட்ட பட்டமளிப்பு விழாவில், அனைவருக்கும் கல்விச் சான்றிதழ்களை வழங்கினார் CCBI ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Filipe Neri. இந்த இணையவழி பட்டயப் படிப்புக்கு சான்றிதழ் வழங்கிய நிகழ்வில் CCBI ஆயர் பேரவையின் திருஅவை சட்ட அவையின் தலைவர், ஆயர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். பெங்களூருவில் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவிற்கும், திருஅவைச் சட்டம் குறித்த ஓராண்டு இணையவழிக் கல்விக்கும், இவ்வவையின் நிர்வாக செயலர், அருள்முனைவர் மெர்லின் ரெஞ்சித் அம்புறோஸ் அவர்கள் ஏற்பாடுச் செய்து அவைகளை நடத்தவும் செய்தார்.
அருள்முனைவர் மெர்லின் அவர்கள், இவ்வவையின் நிர்வாகச் செயலராக இருக்கும் அதேவேளையில், பெங்களூரு புனித பேதுரு பாப்பிறை குருமடத்தில் திருஅவைச் சட்ட பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். [2024-02-06 22:35:26]


மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அருள்பணியாளர் விடுதலை!

இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் குழந்தை உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட கார்மெல் துறவுசபையைச் சேர்ந்த அருள்பணியாளர் Anil Mathew அவர்கள், கைது செய்யப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும், இது கிறிஸ்தவ பணிகளை ஒடுக்கும் மாநில அரசின் ஒரு முயற்சியாகும் என்று தலத் திருஅவையின் தலைவர்கள் கூறியுள்ளனர் என்றும் யூகான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் பணிபுரிந்த அருள்பணியாளர் Anil Mathew இம்மாதம் 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்யப்பட்டார் என்றும், பின்னர் ஜனவரி 28, இஞ்ஞாயிறன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார் என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
போபாலில் உள்ள அஞ்சல் பெண்கள் விடுதியின் இயக்குநர் Mathew, சிறார் நீதிச் சட்டத்தின் விதிகளை மீறுதல், சட்டவிரோதமாகக் குழந்தைகள் இல்லம் நடத்துதல் மற்றும் மதமாற்ற முயற்சிகளில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கும் அச்செய்திக் குறிப்பு, சட்டவிரோதமாக குழந்தைகள் இல்லம் நடத்தியதற்காக அருள்பணியாளர் Anil Mathew-வை தண்டிக்க முடியாது, அதற்குச் சட்டத்தில் இடமில்லை என்றும் நீதிமன்றம் இவ்வழக்குக் குறித்துத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அருள்பணியாளர் மேத்யூவின் வழக்கறிஞர் Kuttianickal அவர்கள், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் அவர்மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, ஏனெனில் அவர் இயக்கும் விடுதி சிறார் இல்லம் அல்ல என்று அறிக்கையொன்றில் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் அச்செய்தி எடுத்துரைக்கிறது.
மேலும் அவ்விடுதியிலுள்ள அனைத்து சிறுமிகளும் அவர்களது பெற்றோரின் எழுத்துப்பூர்வ வேண்டுகோளின் பேரில்தான் பெண்கள் விடுதியில் தங்க அனுமதிக்கப்பட்டனர் என்றும், சட்டத் தேவையின்படி இவ்விடுதி பள்ளிக் கல்வித் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு விளக்குகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும் [2024-02-01 22:24:54]