இறை இரக்க ஆண்டில் திருமலை ஆயரின் தலைமையில் சிறப்புடன் நடைபெற்ற கேவலார் அன்னையின் பெருவிழா
13-08-2016


புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து யேர்மனி தேசத்தில் கேவலார் திருப்பதியில், இலங்கை மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காக வேண்டுதல் செய்யும் பெருவிழா இவ்வாண்டும் 13.08.2016 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரகடனப்படுத்தப்பட்ட இரக்கத்தின் ஜூபிலி ஆண்டில் „உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்“(லூக்கா 6:36) என்ற தொனிப்பொருளில் இம்முறை இத்திருவிழா நடைபெற்றது.

பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கேவலார் திருயாத்திரையில் பங்கேற்றனர். இவ் திருவிழாவிற்க்காக திருமலை மறைமாவட்ட ஆயர் அதிவண.நோயல் இம்மானுவேல் தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்தார். கேவலார் திருவிழாவிற்க்கான ஆயத்த வழிபாடுகள் 12.08.2016 வெள்ளிக்கிழமை மாலை 18.00மணிக்கு செபமாலை பவனியோடு ஆரம்பமாகின. செபமாலை பவனிக்கு பின்னர் அதே நாளில் 19.00 மணிக்கு நற்கருணை ஆராதணையும் நடைபெற்றது.

ஆயரின் மறையுரை

திருவிழாத்திருப்பலி 13.08.2016 அன்று காலை 10.45 மணிக்கு, திருமலை மறைமாவட்ட ஆயர் அதிவண.நோயல் இம்மானுவேல் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. ஆயர் தமது மறையுரையில் புலம் பெயர் தமிழ் மக்களின் ஆறுதலுக்கான ஒரு பதியாகவும் உறவுகளை வளர்க்க உதவுகின்ற ஒரு மையமாகவும் கேவலார் பதி விளங்குவதாக குறிப்பிட்டார். அன்னை மரியாள் தனது வாழ்வில் என்றுமே இறைவனை சார்ந்து வாழ்ந்த்தைப்போல நாமும் வாழ்ந்து இறைவனின் ஆசீரைப் பெறவேண்டும் என்று கூறினார். திருவிழாத் திருப்பலியின் பின்னர் மதியம் 14.00 மணிக்கு மேலும் ஒரு திருப்பலியும் மாலை 15.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் அதனை தொடர்ந்து அன்னை மரியாளின் திருச் சுருப பவனியும் நடைபெற்றது.

இலங்கை திருநாட்டினை ஒல்லாந்து(நெதர்லாந்து) நாட்டினர் ஆட்சி செய்த பதினேழாவது நூற்றாண்டில் கத்தோலிக்க விசுவாசத்தினை பாதுகாக்க, மக்கள் மன்னார் மாவட்டத்தின் மடு என்னும் வனப்பிரதேசத்தில் தஞ்சம் புகுந்தனர். அம்மக்களை அன்னை மரியாள் தனது பரிந்துரையினால் பாதுகாத்தார். இதனால் அம்மக்கள் ஆண்டுதோறும் அன்னைக்கு விழா எடுத்து வருகின்றனர். இம் மடுத்திருப்பதியானது இன்றும் இலங்கையில் வாழும் பல்லின மக்களை இணைக்கும் பாலமாக விளங்குகிறது. இம் மடு அன்னையின் திருவிழாவினை ஐரோப்பிய மண்ணில் நினைவுகூருவதற்காக, யேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தினால் 1987ஆம் ஆண்டில் இருந்து இவ்விழா கேவலார் திருப்பதியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இம்வாண்டோடு தமிழ் மக்களின் கேவிலார் நோக்கிய திருயாத்திரை 29து ஆண்டாகவும் சிறப்புடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அடுத்த கேவலார் திருவிழா 12.08.2017 அன்று நடைபெறும்.


திருவிழாவின் ஒலிப்பதிவுகள்

திருவிழாத் திருப்பலி நற்கருணை ஆராதனை


யேர்மன் Das Erste தொலைக்காட்சியில் கேவலார் திருவிழா பற்றிய் செய்தி

குற்ப்பு: முழுமையான காணொளி பதிவு விரைவில் தரவேற்றம் செய்யப்படும்