வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)



யேசுவின் அன்பே நம் வாழ்வை மாற்றுகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

இயேசுவிடமிருந்து நாம் பெறும் அன்பே நம் வாழ்க்கையை மாற்றியமைத்து, பிறரையும் அன்புகூரச் செய்யும் வலிமைபொருந்தியவர்களாக நம்மை மாற்றம் பெறச் செய்கிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 23, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள தனது குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நம்மை அன்பு கூர்ந்ததால் மட்டுமே நாமும் பிறரை அன்புகூர முடிகிறது, ஏனென்றால் அவர் தம்முடைய தூய ஆவியாரை நம் இதயங்களில் ஊற்றுகிறார். அவருடைய அன்பு நம்மை குணப்படுத்துகிறது மற்றும் மாற்றுகிறது என்றும் விளக்கியுள்ளார். [2024-04-23 22:59:39]


புலம்பெயர்ந்தோரை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் : JRS UK

அடுத்த 10 முதல் 12 வாரங்களில் ருவாண்டாவிற்குத் தஞ்சம் கோரும் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என்ற பிரித்தானிய பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்தோர்மீதான அந்நாட்டின் பொறுப்பைநிலைநிறுத்தும் பொருட்டு, இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியகம் தொடர்ந்து பரப்புரை செய்யும் என்று அவ்வமைப்பு கூறியுள்ளதாகத் தெரிவிக்கிறது ICN செய்தி நிறுவனம்.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அந்நாட்டிற்கான இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியகத்தின் இயக்குநர் Sarah Teather அவர்கள், ருவாண்டா திட்டம் மனிதாபிமானமற்றது போலவே அபத்தமானது. அது உயிர்களை அழிக்கும், பாதிக்கப்படக்கூடிய மக்களை ஆபத்தில் ஆழ்த்தும் என்று கூறியுள்ளதுடன், இதனால் இங்குப் புகலிடம் தேடிவரும் மக்களுக்கான நமது கடமையை நாம் கைவிடுவதைப் பார்க்க முடிகிறது என்றும், இது தேர்தலுக்கான ஏமாற்றுவேலை என்றும் கூறியுள்ளார்.
எங்கள் ஆதரவாளர்களின் உதவியுடன், பிரித்தானியாவிற்கான இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியகம் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நினைக்கும் அரசின் அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எதிர்க்கும் என்று சூளுரைத்துள்ள Teather அவர்கள், இந்தக் கொடூரமான திட்டத்தால் உரிமைகள் அச்சுறுத்தப்படும் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் பாதுகாப்பைத் தேடி இங்கிலாந்துக்கு வரும் அனைவருக்கும் நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் புலம்பெயர்ந்தோரை வலுக்கட்டாயமாகவும் நிரந்தரமாகவும் ருவாண்டாவிற்கு மாற்றுவதற்கான திட்டங்கள், அம்மக்களின் கோரிக்கையை ஆராயாமல், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதலில் அறிவிக்கப்பட்டது என்பது நம் நினைவில் கொள்ளத்தக்கது. (ICN) [2024-04-23 22:58:12]


பாகிஸ்தானில் தாக்குதலுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்

பாகிஸ்தானின் ஜாரன்வாலா நகரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் இடம்பெற்று 8 மாதங்கள் கடந்தபின்னரும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் நீதிக்காக இன்னும் காத்திருப்பதாகவும், அவர்களுக்கு நியாயம் கிட்டும் என்ற நம்பிக்கை குறைந்துவருவதாகவும் இங்கிலாந்து பாராளுமன்ற குழு கூட்டத்தில் கத்தோலிக்க உதவி அமைப்பு ஒன்று புகார் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி, அதாவது அந்நாட்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்குப்பின் ஜாரன்வாலா என்ற இடத்தில் புனித நூலான குர்ஆனை அவமதித்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் கிறிஸ்தவக் குடியிருப்புக்கள் மீது முஸ்லீம் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதில் 26 கிறிஸ்தவக் கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட நிலையில், எண்ணற்ற கிறிஸ்தவர்கள் அங்கிருந்து வெளியேறியது பற்றியும் மத விவகாரங்களுக்கான இங்கிலாந்து பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் தகவல்களை எடுத்துரைத்த கத்தோலிக்க உதவி நிறுவனமான Aid to the Church in Need அமைப்பு, குற்றமிழைத்தவர்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கவலையை வெளியிட்டுள்ளது.
ACN எனப்படும் Aid to the Church in Need அமைப்பு, CSW எனப்படும் உலகலாளாவிய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டமைப்பு, இங்கிலாந்தின் அஹ்மதியா முஸ்லீம் அமைப்பு, இந்து அமைப்பு மற்றும் பாகிஸ்தான் சிறுபான்மையினர்க்கான பாராளுமன்ற குழு ஆகியவைகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இந்த பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில், 2023ஆம் ஆண்டு ஆகஸ்டில் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல், அவர்களின் வரலாற்றில் மிகவும் இருண்ட நாட்களுள் ஒன்று என அறிவிக்கப்பட்டது.
இந்த குழுக்கூட்டத்தில் உரையாற்றிய ACN அமைப்பினர், பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலைகள் குறித்து ஆராயும் நோக்கில் அந்நாட்டில் தேசிய அவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசை இங்கிலாந்து அரசு வலியுறுத்தவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தாக்குதல் நடந்து 8 மாதங்கள் கடந்த பின்னரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படாதது குறித்து பாகிஸ்தானில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பைசலாபாத் கத்தோலிக்க ஆயர் Indrias Rehmat அவர்கள், இஸ்லாம் கும்பல்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட கோவில்களை சீரமைக்காமல், அரசு அதிகாரிகள் வெறுமனே வெள்ளையடித்து மட்டும் கொடுத்திருப்பதால், அக்கட்டிடங்கள் ஆபத்தான நிலையிலேயேத் தொடர்கின்றன என கூறினார். [2024-04-22 22:57:14]


குழந்தைகள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

கடந்த 72 மணி நேரத்தில் பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையில் 3 குழந்தைகளும் ராஃபாவில் 14 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, குழந்தைகள் தொடர்ந்து இவ்வாறு கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது யுனிசெஃப் எனப்படும் பன்னாட்டுக் குழந்தைகள் நல அமைப்பு. ஏப்ரல் 21 ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட யுனிசெஃப் அறிக்கையில் போரினால் பாதிக்கப்படும் குழந்தைகள் பற்றிய தகவல்களை டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவிற்கான யுனிசெஃப் மண்டல இயக்குனர் அதேலே கோடர்.
நீண்ட காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினால் பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள் மிகவும் துயரமான மற்றும் கொடிய வன்முறைச் சூழலில் சிக்கித் தவிக்கின்றனர் என்றும், இப்போரானது கணக்கிலடங்காத வகையில் குழந்தைகளைப் பாதிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் அதேலே.
பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையில் உள்ள துல்கரேமில் அண்மையில் ஏற்பட்ட இராணுவச் செயல்பாடுகளால், பாலஸ்தீனத்தை சார்ந்த மூன்று குழந்தைகளும், ராஃபாவைச் சார்ந்த ஏறக்குறைய 14 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் இன் டுவிட்டர் பக்கத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளார் அதேலே கோடர்.
குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் இப்போர் நிறுத்தப்படவேண்டும் என்றும், உடனடி போர் நிறுத்தம் மிக அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார் கோடர். 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களினால் இறந்த, காயம்பட்ட மற்றும் ஊனமுற்ற 47,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் அணு ஆயுதங்களால் ஏற்பட்ட தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது யுனிசெஃப்.
துப்பாக்கிச் சூடு, பிற ஆயுதங்களால் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட வெடிகுண்டு ஆயுதங்களால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளது. [2024-04-22 22:56:26]


கியூபெக் ஆயர்கள்:பசியால் துன்புறுவோரின் குரலுக்குச் செவிமடுங்கள்

பசியால் துன்புறுவோரின் குரலுக்குச் செவிமடுப்பதுடன், அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதிச் செய்யவேண்டியது கிறிஸ்தவ சமூகங்களின் கடமை என அழைப்புவிடுத்துள்ளனர் கானடாவின் கியூபெக் ஆயர்கள். கியூபெக் பகுதியில் நிலவி வரும் உணவு நெருக்கடிக் குறித்து அப்பகுதி கிறிஸ்தவ சமூகங்களும் தனியார்களும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, நற்செய்தியின் ஒளித்துணையுடன் அனைவருக்கும் உணவு கிடைக்க தேவையானவற்றை ஆற்றவேண்டும் என கேட்டுள்ளனர் ஆயர்கள். 2023ஆம் ஆண்டில் கியூபெக் மக்கள்தொகையில் 10 விழுக்காட்டினர் அங்குள்ள உணவு வங்கிகளைப் பயன்படுத்தியதாகவும், இது 2022ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 30 விழுக்காடு அதிகம் எனவும், 2019ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 73 விழுக்காடு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் பகுதி மக்களிடையே உணவு நெருக்கடி மட்டுமல்ல, உறைவிடமின்மை, பணவீக்கம் போன்றவையும் துயர்களை வழங்கிவருவதாக தெரிவிக்கும் ஆயர்கள், குறைந்த விலையில் சத்தான உணவைப் பெறுவது குடிமக்களின் உரிமை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மே மாதம் முதல் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இச்செய்தியை வெளியிட்டுள்ள ஆயர்கள், கியூபெக் பகுதியில் ஒரு வேலையைப் பெற்றிருப்பது என்பது மட்டும் ஒருவருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு போதுமான உணவை வழங்குவதாக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
சமூகத்தின் ஏனைய மக்களுடன் இணைந்து கிறிஸ்தவர்கள், நீதியான ஒரு சமூகத்தின் நம்பிக்கைகளை உயிரோட்டமுடையதாக வைக்க உதவவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர் கானடாவின் கியூபெக் ஆயர்கள். [2024-04-19 23:03:29]


பாகிஸ்தானில் தாக்குதலுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்

பாகிஸ்தானின் ஜாரன்வாலா நகரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் இடம்பெற்று 8 மாதங்கள் கடந்தபின்னரும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் நீதிக்காக இன்னும் காத்திருப்பதாகவும், அவர்களுக்கு நியாயம் கிட்டும் என்ற நம்பிக்கை குறைந்துவருவதாகவும் இங்கிலாந்து பாராளுமன்ற குழு கூட்டத்தில் கத்தோலிக்க உதவி அமைப்பு ஒன்று புகார் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி, அதாவது அந்நாட்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்குப்பின் ஜாரன்வாலா என்ற இடத்தில் புனித நூலான குர்ஆனை அவமதித்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் கிறிஸ்தவக் குடியிருப்புக்கள் மீது முஸ்லீம் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதில் 26 கிறிஸ்தவக் கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட நிலையில், எண்ணற்ற கிறிஸ்தவர்கள் அங்கிருந்து வெளியேறியது பற்றியும் மத விவகாரங்களுக்கான இங்கிலாந்து பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் தகவல்களை எடுத்துரைத்த கத்தோலிக்க உதவி நிறுவனமான Aid to the Church in Need அமைப்பு, குற்றமிழைத்தவர்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கவலையை வெளியிட்டுள்ளது.
ACN எனப்படும் Aid to the Church in Need அமைப்பு, CSW எனப்படும் உலகலாளாவிய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டமைப்பு, இங்கிலாந்தின் அஹ்மதியா முஸ்லீம் அமைப்பு, இந்து அமைப்பு மற்றும் பாகிஸ்தான் சிறுபான்மையினர்க்கான பாராளுமன்ற குழு ஆகியவைகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இந்த பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில், 2023ஆம் ஆண்டு ஆகஸ்டில் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல், அவர்களின் வரலாற்றில் மிகவும் இருண்ட நாட்களுள் ஒன்று என அறிவிக்கப்பட்டது.
இந்த குழுக்கூட்டத்தில் உரையாற்றிய ACN அமைப்பினர், பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலைகள் குறித்து ஆராயும் நோக்கில் அந்நாட்டில் தேசிய அவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசை இங்கிலாந்து அரசு வலியுறுத்தவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தாக்குதல் நடந்து 8 மாதங்கள் கடந்த பின்னரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படாதது குறித்து பாகிஸ்தானில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பைசலாபாத் கத்தோலிக்க ஆயர் Indrias Rehmat அவர்கள், இஸ்லாம் கும்பல்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட கோவில்களை சீரமைக்காமல், அரசு அதிகாரிகள் வெறுமனே வெள்ளையடித்து மட்டும் கொடுத்திருப்பதால், அக்கட்டிடங்கள் ஆபத்தான நிலையிலேயேத் தொடர்கின்றன என கூறினார். [2024-04-19 23:02:30]


WUCWO ஒன்றியம் நடத்தும் நிகழ்நிலை சந்திப்பு

உலக கத்தோலிக்கப் பெண்கள் அமைப்புகளின் ஒன்றியத்திற்கு (WUCWO) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகுந்தளவில் தனது ஆதரவை வழங்கி வருகின்றார் என்று கூறியுள்ளார் அதன் தலைவர் Mónica Santamarina. வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி, இவ்வமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இணையதளவழி (zoom) உரையாடல் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு உரைத்துள்ள Santamarina அவர்கள், இச்சந்திப்பு திருஅவையில் பெண்கள் தங்களின் பங்களிப்பை இன்னும் வலுப்படுபடுத்திக்கொள்ள உதவக்கூடியதாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
'தூய ஆவியில் உரையாடல்கள்' என்ற தலைப்பில் இந்த இணையதளவழி உரையாடல் நிகழவிருப்பதாகவும், இந்த முன்மொழிவு ஒருங்கிணைந்த பயணக் கற்றலின் (School of Synodality) ஒரு பகுதிதான் என்றும் இந்த நேர்காணலில் எடுத்துக்காட்டியுள்ள Santamarina அவர்கள், இந்தத் திட்டத்தின் வழியாகப் பல பெண்கள் ஐந்து கண்டங்களில் பயிற்சி பெறுகின்றனர் என்று உரைத்துள்ளார்.
இக்கூட்டத்தில் ஒவ்வொரு பங்கேற்பாளரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்ற அனுபவங்களையும் கண்ணோட்டஙகளையும் கேட்கவும் உதவும் விதமாக, இவ்வுரையாடல் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் பிரஞ்சு மொழிகளில் சிறிய குழுக்களையும் கொண்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் Santamarina
எங்களின் ஒன்றியத்திற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கி வருகின்றார் என்று தெரிவித்த Santamarina அவர்கள், எங்களின் இந்த இணையதளவழி உரையாடல் நிகழ்வை அவர் மிகவும் விரும்பினார் என்றும், கடந்த ஆண்டு எங்களை சந்தித்தபோது, சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களைச் சென்றடையும் வகையில் தொடர்ந்து பணியாற்றுமாறு அவர் எங்களை ஊக்குவித்தார் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார். [2024-04-17 22:03:15]


காசாவில் பாதிக்கப்பட்ட குழந்தையின் நேரடி சாட்சியம்

காசாவில் 200 நாட்களாக நீடித்து வரும் மோதலால் குழந்தைகளின் துயரங்கள் மேலும் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளன என்றும், போரின் கொடூரத்தால் அவர்களின் வாழ்க்கையே மாறிபோயுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
ஏப்ரல் 17, இப்புதனன்று இத்தகவலை வழங்கியுள்ள அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம், 14 வயது நிரம்பிய Yousef என்ற குழந்தையின் திகிலுறச்செய்யும் நேரடி சாட்சியம் அடங்கிய காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
14 வயது நிரம்பிய Yousef என்ற குழந்தை காசா பகுதியின் தெற்கில் உள்ள கான் யூனிஸில் வசிக்கிறார். தற்போது ஜோர்டான் அரசால் அமைக்கப்பட்டுள்ள கள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், கொடூரமான இரவுநேர வெளியேற்றத்தின் போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட திகிலுறச்செய்யும் அனுபவத்தை இந்தக் காணொளிக்காட்சியில் விவரிக்கிறார். அதில் தனது தந்தை கொல்லப்பட்டது மற்றும் தனது இரண்டு சகோதரர்கள் காயமடைந்தது குறித்தும், தான் மருத்துவமனையை அடைந்தது குறித்தும் கூறியது அனைத்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. [2024-04-17 22:01:49]


உரோம் புறநகர் பங்குதளத்தில் சிறார்களுடன் திருத்தந்தை

உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில் உரோம் புறநகர் பகுதியின் புனித ஜான் மரி வியான்னி பங்குதளத்திற்குச் சென்று அங்கு புது நன்மைக்காகத் தயாரித்துவரும் சிறார்களுக்கு இறைவேண்டலின் பள்ளி என்ற இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். புது நன்மைக்குத் தயாரித்துவரும் சிறாரின் கேள்விகளுக்குப் பதிலளித்து அவர்களோடு உரையாடி அவர்களுக்கு உற்சாகமூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்ல நேரங்களிலும், துயர் நிறைந்த வேளைகளிலும் செபத்தில் இறைவனை நோக்கித் திரும்புமாறு அழைப்புவிடுத்தார்.
ஏறக்குறைய 200 குழந்தைகள் குழுமியிருக்க அவர்களிடையே இயல்பாக உரையாடிய திருத்தந்தை, அனைத்து வேளைகளிலும் இறைவனோடு உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என புது நன்மைக்கு தயாரித்துவரும் சிறாரிடம் கேட்டுக்கொண்டார்.
2025ஆம் ஆண்டின் ஜூபிலிக்கென ஆன்மீகத் தயாரிப்பின் ஒரு பகுதியாக இறைவேண்டல் ஆண்டை இவ்வாண்டு சிறப்பித்துவரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக சிறார்களுக்கென இறைவேண்டல் பள்ளி என்னும் இயக்கத்தை ஏப்ரல் 11 வியாழக்கிழமை துவக்கிவைத்தார் திருத்தந்தை.
அனைத்திற்கும் நன்றி சொல்ல நாம் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நன்றி சொல்லல், மன்னிப்பு கேட்டல், தவறுக்காக மனம் வருந்துதல் ஆகியவைகளின் முக்கியத்துவம் குறித்து சிறார்களுக்கு எடுத்துரைத்தார்.
நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத் துறையால் தயாரிக்கப்பட்டு, வத்திக்கான் அச்சகத்தால் அச்சிடப்பட்ட ஜெபக்குறிப்புகள் அடங்கிய கையேடுகளையும் சிறார்களுக்கும், மறைக்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். [2024-04-13 01:24:19]


உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சி நமக்கானது! : திருத்தந்தை பிரான்சிஸ்

உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சி நமக்கானது, ஏனென்றால் அது நம்முடைய திருமுழுக்கின் நாளில் நமக்குக் கொடுக்கப்பட்டது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஏப்ரல் 11, இவ்வியாழனன்று, வெளியிட்ட தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பாஸ்கா காலத்தின் மகிழ்ச்சியை நாம் தழுவிக்கொள்வோம் என்றும் உரைத்துள்ளார்.
மேலும் உயிர்த்த கிறிஸ்துவை நற்கருணையிலும், அவருடைய மன்னிப்பிலும், இறைவேண்டலிலும், நற்பணி செயல்களிலும் தேட விரைவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை. [2024-04-11 23:02:39]